Sunday, December 30, 2012

ஊட்டி விடாதீர்கள்

Copyright : Harish Mohan Photography


குறிப்பு : மனதாலும் உடலாலும் காயப்பட்ட அத்தனை பெண் மலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.


சோற்றுப்பருக்கைச் செல்லமாய்ச்சிதைத்து - அதோடு
பசும்பால் தோய்த்து - விரலால்
ஊட்டுவாள் - அம்மா .

ழங்களின் தோலுரித்து - அதைப்
பொடியாய் நறுக்கி - நசுக்கி
ஊட்டுவார் - அப்பா.

சாப்பிடுவது எதுவாயினும் - அதை
சத்தமில்லாமலெடுத்து - நாவால் ஊதி
ஊட்டுவார் - தாத்தா.

ரொட்டித்துண்டை  நீரில் நனைத்து
அதனை அமுக்கி - குழைத்து
ஊட்டுவான் - அண்ணன்.

போதும் உறவுகளே !
இனியும் அவளுக்கு
ஊட்டி விடாதீர்கள்.

ல்லூறுகள் வல்லுறவுக் கொள்ளத்
துடிக்கும் தேசத்தில் - அவள்
தனியாகத்தான் வேட்டையாட வேண்டியிருக்கிறது - ஆதலால்
அவளுக்கு உண்ணக் கற்றுக்கொடுங்கள்;
ஊட்டி விடாதீர்கள்.

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, December 29, 2012

டெல்லியும் சில நாய்களும் :(

Copyright : worth1000.com

லகம் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றது. 'இந்தியா' மட்டும் தான் தவறுகளை சமூகத்தின் கண்களிலிருந்து மறைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. நான் இதைப் பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன். மனம் கனத்தது. ஆதலால் ...


"வர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்; அவள் இந்தியாவின் மகள்; என்ன செய்கிறோம் நாம் ; அரசாங்கம் தூங்குகிறதா ? " என கூச்சலிடும் சமூகமே ! உன்னிடம் ஒரேயொரு கேள்வி . இதன் அடிப்படை யது என தெரியுமா ?

  1. பாரம்பரியத்தில் வாழ்ந்து வந்த இந்தியாவில் பப்புகளும், பகட்டு வாழ்கையும் செய்த புரட்சி பணம் மட்டுமல்ல ; பாலியல் பலாத்காரங்களும் தான்.
  2. நீ ஊரைத் திருத்த வேண்டாம்; உன் வீட்டில் உள்ள உன் தந்தையை, தமயனை, கணவனை, மகனை, நண்பனைத்  திருத்து; தவறுகள் குறையும். கருப்பு பக்கங்கள் இல்லாத மனிதன் மிகக் குறைவு.
  3. இலங்கைப் பிரச்சனைக்கண் ஏற்பட்ட வலிகளை இதனோடு ஒப்பிட்டு சில நண்பர்கள் வினவியிருந்தார்கள். இரண்டுமே உயிர் தான் ; இரண்டுமே உணர்வுகள் தான். எல்லாவற்றுக்கும் கொடி பிடித்துக் கோஷமிடுவது முட்டாள்த்தனம். அதை செய்வதை விட கொடிபிடித்து வரும் கரை வேட்டியில் கொள்கையும், உண்மையும், நன்மையையும் கொண்ட உள்ளங்களைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் நம் மக்களுக்கு வர வேண்டும் என்பதையே நான் விழைகிறேன்.
  4. ஒற்றுக்கொள்ளாமல் நடந்தால் பலாத்காரம். அதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன; நல்லது. ஒற்றுக்கொண்டு நடக்கும் கூத்துகளுக்கு பெயர் என்ன ? கலாச்சாரமா ? இதனைத் தட்டிக் கேட்பது யார் ? கருக்கலைப்பின் புள்ளிவிபரங்கள் உங்களில் ஒருவரையேனும் சுடவில்லையா ?
  5. பணத்தாலும், அரசியல் பலத்தாலும், அடிமைத் தனத்தாலும் இன்றும் பல இடங்களில் தவறுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைக் களைவது எப்போது ?  அந்த நாய்களுக்குத் தூக்குத் தண்டனை ஒரு தீர்வாகும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது உலகிற்கு வேண்டுமானால் ஒரு பாடமாக அமையலாம். ஆனால் அவனுக்கு, அது ஒரு நிமிட வேதனை.  இந்தக் கொடியவனுக்கு அந்த ஒரு நிமிட தண்டனை போதுமா ?
றுதியாக, அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்ளப் போவதில்லை; மாறாக, எங்கேனும், என்றேனும் ஏதோவொரு  மனித ஓநாய் , மாமிச வெறி கொண்டு மலர்களைத் தீண்டும் பொழுது அவள் கரங்கள் அதனைச் சுட்டெரிக்க வேண்டும் என்பதையே வேண்டுகிறேன் .

மூகமே ! சிந்தித்து செயல்படு; மாற்றங்கள் உன்னில் இருந்து தான் உருவாக வேண்டும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, December 23, 2012

என்னை மன்னிப்பாய் தானடி ?

Photo Courtesy : Wolfgang Lüpertz




முன் குறிப்பு : நேற்று இரவு twilight breaking dawn முதல் பகுதி பார்த்தேன் . பெல்லா எட்வர்டின் மகளைப் பிரசவிக்கும் காட்சி . அதில் என்னைப் பாதித்தது அவள் அல்ல அவன். 'மகளை விட மனைவி தான் வேண்டும்' என்னும் அவனுடைய தவிப்பு. ஆம், இப்படித்தானே ஒவ்வொவொரு கணவனும் ; ஆனால் அது பதிவு செய்யப்படாமலே இருப்பதாக எனக்கு ஒரு நினைப்பு. அதைத் தொடர்ந்தே இக்கவிதை. இது சிறப்பானதாக எனது மனம் கருதவில்லை ! இருக்கலாம் ; என் மகள் பிறக்கும் சமயத்தில் இக்கவிதை இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்படலாம் !



காதல் கடலில் நீராடி
காமக் கரை தொட்டு விட
கருவில் உதித்திட்டால் பௌர்ணமி
கண்மணியே - நீ சுகம் தானடி ?

வெயிற்கால மழைநாள் ஒன்றில்
வெட்கப்புன்னகை நீ சிந்த - எடுக்கச் சென்ற
 என்னிதழை எச்சில் படுத்தி சொன்னாயடி
என்னுயிரே - நீ நலம் தானடி ?

தேகமெல்லாம் நீ வாடும் போதும்
தென்றல் வந்து உன்னை தீண்டும் போதும்
தேகப்போர்வை நெய்வேனடி
தேவதையே - நீ சவுக்கியம் தானடி ?

மேடிட்ட வயிற்றில்
மெதுவாய் விரல் தீண்டி
முத்தமிட்டுச் சென்றேனடி
மென்பூவே - நீ பத்திரம் தானடி ?

லியோடு என் விரல் பிடிக்க
மழலையவள் மண் பிறக்க
செத்து விட்டேன் நானடி
செந்தாமரையே - என்னை மன்னிப்பாய் தானடி ?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, November 17, 2012

நான் விஜய் ரசிகனில்லை :(



முன்குறிப்பு: இது ஒரு குறிப்பிட்டு தலைவனைப் பின்பற்றும் ரசிகர்களை மட்டும் குறிப்பிடும் பதிவல்ல; அறிவின்றி நடந்து கொள்ளும் அத்தனை ரசிகர்களுக்குமான பதிவு.

மேலுள்ள தலைப்பைச் சற்று உரக்கத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ரசிகர்கள் என்ற பெயரில் நாம் செய்யும் கண்மூடித்தனங்களைப் பார்க்கும் பொழுது. உங்களுக்குத் தெரியுமா ? இரத்தமின்றி எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படாமல் போகின்றன என ; உங்களுக்குத் தெரியுமா ? டெங்கு போன்ற காய்ச்சலுக்கு இறுதிநிலை சிகிச்சை இரத்தம் தான் என ; உங்களுக்குத் தெரியுமா ? தன் இரத்தத்தைப் பிரித்துதான் உங்கள் தாய், உங்களுக்கு தாய்ப்பால் தந்தாள் என . எனக்குத் தெரியும் ரசிகர்களே ! உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என !

ன் தலைவனின் திரைப்படம் வெளியாகிறது என்றால் போதும், நூறோ ஐந்நூறோ டிக்கெட் பற்றி கவலையில்லை, அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி, வெற்றிப்புன்னகைப் பூத்து, காட்சிக்கு காட்சி கைத்தட்டி, 'எங்க தளபதி டா' என ஆன் தி ஸ்பாட் வசனங்கள் பேசி, போஸ்டர் ஒட்டி, கட்-அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்து, உணர்சிகளை விற்று உல்லாசம் காணும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இரத்தத்தின் அருமையும் உயிரின் மதிப்பும் . கோபம் கண் மறைத்து, வார்த்தைகள் ஏ சான்றிதழ் வாங்க காத்திருக்கும் பொழுதும், ரசிகர்களாகிய உங்களை கண்ணியமாகத் திட்டத்தான் விழைகிறேன்.

ன் இந்தக் கோபம் என தாங்கள் வினவினால், அதற்கான பதில் கீழுள்ள புகைப்படம் தான்.



தியுள்ள மானிடன் செய்யும் செயலா இது ? பால் விலையை விட இரத்தம் மலிவாகிப்போனது என்ற எண்ணத்திலோ தாங்கள் இத்தகையத் தாரகக் கொள்கையைப் பூண்டுள்ளீர்கள் ! நானும் ரசிகன் தான் சில நடிகர்களின் நடிப்புக்கு மட்டும். சரி ரசிகா !உன்னிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விழைகிறேன் ; நீ அதற்கு சினம் கொண்டாலும் சரி.

  1. உன் தலைவன் என தலையில் வைத்துக் கொண்டாடுகிறாயே, உன் வீட்டுச்சோற்றுப்பருக்கைக்கு உப்பாவது அளித்திருப்பானா உன் தலைவன்?
  2. உன் தலைவனுடைய அரசியல் ஆசைக்கு, பலியாகப் போவது உன் இளமையும் கனவுகளும் தான் என்பது உனக்குத் தெரியுமா ?
  3. 'சினிமா' என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் தான்; வாழ்க்கையில்லை என்பது உனக்குத் தெரியுமா ?
  4. கண்மூடித்தனமாக நவீன சாமியார்களைப் பின்பற்றும் பக்தர்களுக்கும் , தலைவனைத் தொழும் உனக்கும் வித்தியாசம் இல்லை என்பது தெரியுமா ?
  5. இறுதியாக, நீ செய்யும் அறிவிலி செயல்களை உன் தலைவன் ரசிக்க மாட்டான் என்பதாவது உனக்குத் தெரியுமா ? 

தற்கான பதிலை நீ தேடி அடைந்தால், இதுபோன்ற செயல்களில் நீ ஈடுபட மாட்டாய். போட்டி நடிகர்கள் இருவருமே கைக்குலுக்கி, கைக்கடிகாரம் பரிசளித்து அன்பு பாராட்டினால் கூட , 'நான் அவர் ரசிகன்; நான் இவர் ரசிகன்' என நீ அடித்துக் கொண்டு தானே இருக்கிறாய் . உன் தலைவன் பணங்களில் படுத்துப்புரள்வதைக் கண்டு மகிழும் உனக்கு, உன் வீட்டில் படுக்கக் கூட பாய் இல்லை என்பதை யாரடா சொல்லி புரியவைப்பது ? என்னைப் பொறுத்தவரை உன் தலைவனுக்கு செய்யும் அதிகப்பட்ச மரியாதை எதுவாக இருக்க வேண்டும் தெரியுமா ? உனது கைத்தட்டல் தான் . தலைவன் மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் உன்மேல் சமூகப்பிரச்சனைகளும், வீட்டுக்கஷ்டங்களும் அவ்வப்போது தண்ணீர் தெளித்துக்கொண்டு தான் இருக்கிறது. நீதான் விழிக்க மறுக்கிறாய். ஆம் ! நான் விஜய் ரசிகனில்லை ; உன்போல் கண்மூடித்தனமாகப் பின்பற்ற !

விழித்தெழு ரசிகா 
வீரியம் கொண்ட விதையாய் 
விவேகம் உள்ள மனிதனாய்  !

ப்பதிவைக்கண்டு, என்னைத்திட்ட வேண்டும்; என் மேல் வழக்கு பதிய வேண்டும் என் விழைந்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள் . ஆனால், அதற்கு முன்பு அருகிலுள்ள இரத்த வங்கியில் இரத்ததானம் செய்து விட்டு வா ! ( ரசிகர் மன்றங்கள் மூலம் இரத்த தானம் செய்தது என்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது ; ஏனெனில் அந்தப் புண்ணியத்திற்கு உரியவன் நீயில்லை ; உன் தலைவன். )


பின்குறிப்பு : 'நான் விஜய் ரசிகனில்லை' என்பதை, 'நான் அந்த மூட செயலைச் செய்த விஜய் ரசிகன் போல் இல்லை' எனவே கொள்ளவும்.


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, November 14, 2012

என் கனவுகளின் தொகுப்பு !


கிறுக்கல்கள்100 நண்பர்களுக்கு முதற்கண் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீண்ட போராட்டங்களுக்குப்  பிறகு, அண்மையில் தான் ஒரு குறும்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை முன்னமே முகப்புத்தகத்தில் நான் பகிர்ந்திருந்தாலும், நேற்று தீபாவளி நன்னாளில் உங்களுக்குச் சொல்லலாம் என விழைந்தேன். பிறகு தான், என் ஞான ஒளியில் ஒரு கீற்று என்னை உசுப்பேற்றி கீழ்வரும் வார்த்தைகளைக் கூறியது ! "அடேய் அற்ப சத்தியசீலா ! ஒருவேளை உனது நண்பர்கள் இனிப்புகளிலோ, வெடிச்சத்தங்களிலோ, வேடிக்கை வெளிச்சத்திலோ, துப்பாக்கியிலோ ( நேற்று படம் பார்த்த எனது நண்பர்கள் நன்றாக உள்ளது என சொல்லிய காரணத்தால், கூடிய விரைவில் நானும் துப்பாக்கியால் சுடப்படக் கூடும்), இல்லை துறு துறுவென ஆங்கிலம் பேசும் தமிழ் நடிகையின் பேட்டியிலோ மெய்மறந்திருக்கக்கூடும்; அப்பொழுது உன்னுடைய கிறுக்கல்கள்100, கிழிக்கப்படும் அல்லவா ! " யோசித்தேன்; ஆதலால் தான் இன்று இவ்வெளியீடு !

நிவேதிதா அவர்களின் தயாரிப்பில், கௌதமின் இயக்கத்தில், மற்றும் பலர் கடின உழைப்பாலும், கற்பனைத்திறத்தாலும் உருவாகிக்கொண்டிருக்கும் உன்னத படைப்பு தான் " என் கனவுகளின் தொகுப்பு ". அடியேன் ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியதும் இதற்கே ! ( கீழே, இடமிருந்து வலம் , ஐந்தாவது  இடத்தில் அடியேன் பெயர் இருப்பதை நோட் செய்யவும்.) என்னதான் நாம் பணியாற்றும் படம் என்றாலும், விமர்சனம் என்று வரும்பொழுது சற்று கராராகத் தானே இருக்க வேண்டும் ! இனி வருவது "போஸ்டர் விமர்சனம்".
இதுவரை இரண்டு போஸ்டர்களை அக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றினை மட்டும் நாம் பார்ப்போம்.

ரு இளைஞன் தனது அறையில், LED வெளிச்சத்தில், இடது கையால் தாளில் எழுதிக்கொண்டிருப்பது போல அக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகே, தலையணை போன்று இரண்டு புத்தகங்கள். சரி இப்பொழுது நம் கற்பனையையும் பிறகு விமர்சனத்தையும் தொடரலாம்.

த்தகைய சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, ஒரு கல்லூரி மாணவன் தன்  காதலிக்கு கடிதம் எழுதுவது போலவே தோன்றுகிறது. இருப்பினும் ஹீரோவின் முகம் சற்று சீரியசாக இருப்பதால், வேறு எதாவது முக்கியமான காரணமாகவும் இருக்கலாம். ஏன் ! ஒரு சமூகப்போராளி மின்வே(வெ)ட்டைக்
குறித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகக் கூட இருக்கலாம்; இல்லை, ஏதோவொரு தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவனாகக் கூட இருக்கலாம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று சூழலுக்குமே இந்தத் தலைப்புப் பொருந்திப்போவது தான். விமர்சனத்திற்கு செல்வோமா ?

ழுத்துக்கோர்வையும், அதனை அதற்கேற்ற இடத்தில் பொருத்தியிருப்பதும் அழகு. "WAKE UP MEDIA PRESENTS" எதார்த்தமான சேர்க்கை என்றாலும், தலைப்போடு பொருந்திப்போவது அழகு. இருப்பினும், WAKE UP MEDIAவிற்கு LOGO இல்லாதது திருஷ்டி. மின்னொளியிலும், சூழலுக்கேற்ற உடைத்தேர்விலும், முகபாவனைகளிலும் கதையின் பாத்திரப்படைப்பிற்குப் பொருந்திப்போகும் கதை நாயகன் 'அஜய் ரூபன்' நல்லதொரு தேர்வு. குறுப்படத்துறையிலும், திரைத்துறையிலும் அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாக உள்மனம் கூறுகிறது. மேலும் தமிழ்க்குறும்படம், போஸ்டர் முழுவதுமே ஆங்கிலம் பூசியிருப்பது ஒரு நெருடல். டைரக்டர் கவனிக்க !


து எப்படியோ ! இது வெறும் கற்பனைக்கனவுகளின் தொகுப்பா ?  இல்லை சாதனைக்கனவுகளின் தொகுப்பா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

கொசுறு தகவல் : "என்னடா இவன் ! பத்து பதினஞ்சு பாட்டு எழுதுனவன் எல்லாம் சும்மா இருக்கான் ; ஒரு பாட்டு எழுதிட்டு இவன் கொடுக்குற அலும்பு இருக்கே ! " என இதழின் ஓரத்தில் என்னை வைது கொண்டிருப்பவர்களுக்கு, என்னுடைய அம்மாசிக்கு ( அம்மம்மா) இப்பாடலை ஒலித்துக் காண்பித்தேன். ' நான் படாத தாலாட்டா?' என சொல்லிக்கொண்டே கேட்க ஆரம்பித்தவர்கள், " நல்ல தாண்டா இருக்கு; உன் பொண்டாட்டிக்கு வேலை மிச்சம்" என சொல்லிச் சென்றாகள் ! அன்பார்ந்த அருமை நண்பர்களே ! இது ஒன்னு போதாதா ஐயா அலும்பு கொடுக்க ?


உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழுள்ள பிளாக்கர் கருத்துப்பெட்டி அல்லது முகப்புதுகக் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, November 3, 2012

அறுவை சிகிச்சை !


Copyright - http://www.dinodia.com



ன்றோ கிறுக்கிய கவிதை ; சில தினங்களுக்கு முன்பு தான் அதன் அர்த்தம் புரிந்தது. கால ஓட்டத்தில் மனிதன் கடவுளுக்கு ( என்னைப் பொறுத்தவரையில் இயற்கையும் கடவுளும் ஒன்றே ! ) செய்யும் மன்னிக்கப்படாத துரோகம் மரம் வதை செய்தல் ! இப்புகைப்படத்தைப்  பார்க்கும் பொழுது சிதறிய வரி(லி )கள் ! .

மானிடா !
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மருத்துவம் பார்க்கும் என்னை - ஏனடா
அறுவை சிகிச்சை செய்து
அடக்கம் செய்கிறாய் ?



கொசுறு கவிதை : மரம் மனிதனிடம் பேசுவது போல் 'மரம் பேசுகிறது' என்னும்  கவிதை சில பல வருடங்களுக்கு முன்பு எழுதிய ஞாபகம் . நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள் . வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மரமெனும் உங்கள் சந்ததியினருக்காக நட்டுச்செல்லுங்கள்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, October 30, 2012

சென்னை ! போடா வெண்ணை என்றது !

Copyright: mckaysavage@flickriver.com

முன் குறிப்பு : சென்னை மேல் அதீத அன்பு வைத்திருப்பவர்கள், இதய நோயாளிகள், இதுவரை சென்னை பக்கம் செல்லாதவர்கள் மற்றும் குறிப்பாக சென்னை வாசிகள் இதனைப்  படிக்காமல் தவிர்க்கமாறு கிறுக்கல்கள்100 சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பின்வரும் விளைவுகளுக்கு நிர்வாகமோ, நிர்வாக ஊழியர்களோ பொறுப்பல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ல மாடிக்கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் மால்கள், சொகுசு திரையரங்குகள் என தனக்கான இமேஜை காலம் காலமாக சென்னை தன்னுள்ளே தக்க வைத்து கொண்டிருப்பதில் எனக்கு துளியும் சந்தேகம் வராதவாறு தான் சென்னை இருந்தது !

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல , திருச்சி வழியாக செல்லாமல் , கும்பகோணம் வழியாக எனது பயணத்தை சொகுசுப் பேருந்தின் (?) ஓட்டுனரும் நடத்துனரும் முடிவு செய்து கொண்டிருந்தார்கள் ! கடைசியில் அத்தடம் வழியே பயணத்தைத்  தொடங்கினார்கள். 'உறக்கம் வராமல் இருந்தால் படி' என என் நண்பன் வாங்கிக் கொடுத்த ஆனந்த விகடன் எனது பையில் உறங்கிக்கொண்டிருந்தது ; எனக்கு உறக்கம் வந்ததால் . சென்னை பயணம் முடியும் வரை அதை நான் படிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்  ( பாஸ் உண்மையிலே சென்னை கொஞ்சம் பிஸி தான் ! )

காலை மணி 4 . இறங்கிய இடம் : தாம்பரம் . தங்குவதற்கென முடிவு செய்யப்பட்ட இடம் : நண்பன் இல்லம் . சேர் ஆட்டோவில் நண்பன் வீடு சென்றோம் ! நானும் என் நண்பர்களும் பின் வரிசையில்! முன்னர் மூன்று பேர் ; அதில் ஒரு இளவயது பெண். ஓட்டுனருக்கு அருகில் ஒருவர் என அடைக்கப்பட்டு அந்த வாகனம் சென்று கொண்டிருந்தது ! காக்பிட்டில் அமர்ந்திருக்கும் பைலட்டை காண்பிக்கும் போது சினிமாவில் ஒரு சாட் வைப்பார்களே, அது போல தான் எனக்கு ரோடு தெரிந்தது ! விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையை சென்னை நிறைவேற்றியிருந்தது ! வழியில், கடமை தவறா காவல்துறை அவர் கடமையை செய்து கொண்டிருந்தார் ! எல்லாம் சரி வர சென்று கொண்டிருந்தது !

ருத்துவக் கழகத்தில் நான்  மருத்துவன் ஆகிய விசயத்தை காலை பத்து மணிக்கு பதிவு செய்த பின்பு சிறிது நேரம் இருந்ததால் ஸ்கை வாக் பக்கம் சற்று ஒதுங்கினோம் . இடையில் எனது தம்பியின் குறுந்தகவல் வேறு, " ஸ்கை வாக்கா ! ஜாலி பண்ணுனா " என . 'பீட்சா' பார்க்க போய்  ஏமாந்து நானும் என் நண்பனும் 'இங்கிலீஷ் விங்க்ளிஷில்' தஞ்சம் புகுந்தோம் . ஏற்கனவே அப்படத்தை நான் தமிழில் பார்த்திருந்ததால் ஹிந்தி என்னை அச்சப்பட வைக்க வில்லை . ஆனால் இன்றளவும் ஒரு இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி கற்கவில்லை என நான் வருத்தப்படவில்லை . காரணம் யாதெனில் சில மாதங்களுக்கு முன்பு தான் 'ஹாக்கி' நமது தேசிய விளையாட்டு இல்லை என சொன்னார்கள் ! இன்னும் சில மாதங்கள் கழித்து 'ஹிந்தி நம் தேசிய மொழி இல்லை என சொல்ல நேரிடும் ( அப்புறம் படிசுட்டோமேன்னு பின்னாடி வருத்தப்படக்கூடாதுல்ல  அதான் ).

 சரி , அது எல்லாம் இருக்கட்டும் நம்ம மேட்டருக்கு வருவோம் ! அங்கே தனியாக ஒரு பெண்ணை கூட பார்க்கவில்லை ! எல்லோர் பக்கத்திலும் அவர்களது பாடிகார்டுகள் ! கொடுத்து வச்ச மவராசனுங்க :) என்று முதலில் நினைத்துக்கொண்டேன் ! பின்னர் தான் , புரிந்தது அவர்கள் எல்லாம் அன்றைக்கு அறுக்கப்பட்ட ஆடுகள் என அவர்கள் டிக்கெட் வாங்க நின்ற பொழுது ! தூரத்தில் பார்க்க மட்டுமே சென்னை பெண்கள் அழகு ! ஓர் இருவரைத்  தவிர . ஒல்லியான ஒரு கல்லூரி பைங்கிளி ( சந்தோசப்பட்டுட்டு போகட்டும் போங்க ! ) தான் இன்னும் ஒல்லியாக தெரிவதற்காக டைட்டாக லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள் . இன்னும் சில பெண்கள் அங்கம் தெரியுமாரான ஆடைகள் , அளவுக்கதிகமான மேக் அப்புகள் என வலம்  வந்து கொண்டிருதார்கள். அதற்குள் என் நண்பன் 'மோமிடோஸ்' என ஒன்றை வாங்கி வந்தான். அதற்கும் எங்கள் வீட்டு காரகொழுக்கட்டைக்கும் எந்த வித்தியாசமும் என்னால் கண்டுபிடிக்க  முடியவில்லை . உண்மை சற்று கசக்கும் தான் ! இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே ! எங்கள் ஊர் ஸ்ரீரங்கத்துப்  பாவாடை தாவணிகளுக்கு இணையாக ஒரு ஜீன்ஸ் டாப்ஸை கூட என்னால் சென்னையில் பார்க்க முடியவில்லை !


டுத்த நாள் MGM ! பைக்கில் பயணம் . முகப்பூச்சு பவுடர் அடிக்காமல் வந்த எனக்கு, சென்னை போக்குவரத்துக் கழகம் இலவசமாக அந்த வேலையை செய்து கொண்டிருந்தது ! முகம் கழுவும் பொழுது தான் தெரிந்தது பல பேர் ஏன் ஆப்கான் தீவிரவாதிகள் போல முகம் மறைத்து செல்கிறார்கள் என!  வழி எங்கும் கட்டிடங்கள் ; அங்கே மனித உருவில் மக்கள்கள் நடந்து கொண்டிருந்தார்கள் ; அவர்கள் சிரிப்பை மறந்திருந்தார்கள்; வேலைக்கென செய்யப்பட்ட ரோபோக்கள் போல தான் அவர்கள் என் கண்களுக்கு தென்பட்டார்கள். அந்த தீம் பார்க்கில்  சில பல விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன பராமரிப்பு காரணமாக ! இருந்தாலும், கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  என் நண்பன் நல்ல காத்து வருதா ( பிகருகலைத் தான் அவன் அப்படி சொல்வான் ) என நீண்ட நேரம் காத்திருந்து, தீம் பார்க் முழுதும் அலைந்து திரிந்து அலுத்திருந்தான். பின்னர் தான் தெரிந்தது நல்ல காற்று வீக் எண்ட்ல அடிக்காதாம் ! 500 ரூபாய் என்னுடைய நஷ்டக் கணக்கில் ஏற்றப்பட்டது !

மாலை பள்ளி நண்பனின் சந்திப்பு ! நண்பர்களை, மனிதர்களை நாம் எந்த வயதில் சந்திக்கிறோமோ அவர்கள் வயதானாலும், அந்த வயதில் இருப்பவர்களாகவே நம் மனது ஏற்றுக்கொள்கிறது. என் நண்பனை நான் பன்னிரெண்டாவது படிக்கும் மாணவனாகத்  தான் பார்த்துக்கொண்டிருந்தேன்; அவன் சென்னை ஐ.டி  புழுதியில் மறைந்து விட்ட ஒரு துகள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மறுபடியும் அன்றிரவு 'பீட்சா' விற்கு முயற்சி செய்து தோல்வியை சந்தித்தோம். அட போங்க பாஸ் ! உங்க ஊர்ல படம் பாக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம் ! கடைசியாக எல்லாம் முடிந்த பின்பு, மனிதம் நிறைந்த மனிதர்கள் குறைவு என்பதை உணர்ந்த பின்பு , அடுத்தவர்களை மிக எளிதாக காயப்படுத்தும் உறவுகள் உண்டு என்பதை அறிந்த பின்பு, என் சுவாசம் நோக்கி பயணமானேன் ! பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு  விவேக்கின் வசனம் 'சென்னை ! போடா வெண்ணை என்றது ! ' என்பது தான் என்  ஞாபகம் வந்தது .

து சென்னை மக்களுக்கு மட்டும் :
( ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கவும் )

1.சென்னை பிடித்திருக்கிறதா ?
2.பணம் மட்டும் தான் வாழ்கையா ?
3.நல்ல காற்றை எப்பொழுது கடைசியாக சுவாசித்தீர்கள் ?
4.நீங்கள் சிரிப்பீர்களா?
5.தீம் பார்க், மால், பப்புகள் தவிர உங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் இடங்கள் சென்னையில் இருக்கின்றனவா ?


பின் குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டவையல்ல ! என் மனம் புண்பட்டதால் எழுதப்பட்டவை !
கொசுறு தகவல்:  26/10/2012 முதல் நான் பதிவு பெற்ற அரசு மருத்துவர் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள் 100




Monday, October 29, 2012

தவிப்பும் தடயம் தவிர்த்தலும்

Photo Courtesy : http://www.coloribus.com

ண்மையில் தான் ஹேமா செல்வராஜின் இக்கவிதையைப் படித்தேன் ! ஒன்று சொல்வது போல் அமைத்து வேறொன்றில் முடிப்பது அழகு ! இது போன்று நானும் முன்பு "விடைபெறுகிறேன் !" என்ற கவிதையை எழுதினேன் . நேரமிருப்பின் வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .


ம்மை அறிமுகமே இல்லாத
இடமாய் தேட வேண்டும்

சுற்றி முகப் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது

பனிப் பெண்கள் இல்லாத
கூட்டம் மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்

ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு

ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்

வக்கிரப் பார்வையோ
சில்மிஷச் சிரிப்போ
இல்லாத விற்பனையாளனா
என்று உறுதிப்படுத்த வேண்டும்

முதலில் ஒரு
வீட்டு உபயோகப் பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்

இத்தனையும் வேண்டும்
கூச்சமின்றி கடையில்
ஆணுறை வாங்க. 


- ஹேமா செல்வராஜ் @ ஆனந்த விகடன்

கருத்து: ம் பாதுகாப்பிற்கு ஆணுறையோ, நம் நலத்திற்கான ஸ்டேப்ரீயூ வாங்க கூனி குறுகி கூச்சப்பட்டுக்   கடைகளில் வாங்கும் நாம் , லஞ்சம் வாங்கவோ , அடுத்தவர் மனங்களைக் காயப்படுத்தவோ  தயங்குவது இல்லை என்பதே நிதர்சனம்.



Wednesday, June 27, 2012

உன் பேர் என் பேர் சேர்த்துவைத்தால் !

Photo Courtesy : sortol.com




 உன் பேர்
என் பேர் சேர்த்துவைத்தால்
காதல் வந்து பிறக்குமா ?
காதல் வந்தால்
நொடிகள் கூட
காத்திருக்கும் தெரியுமா ?

நீஉண்ட தேநீர் உண்டு
இனிப்புச் சேர்க்கச் சென்றேனடி;
இதழோடு இதழ் சேர்த்து
தேநீர் கசக்க செய்தாயடி !

சிறு சிறு முத்தம் கேட்டு
சிறுகச் சேர்த்தேன் என்னை
முழுதாய் கட்டி அனைத்து
மொத்தம் தொலைத்தாய் பெண்ணே !

விரலோடு மழைகோர்த்து
வழிகள் நூறு சென்றேனடி
வழியெங்கும் நீயே நின்றால்
பாதை எங்கே காண்பேனடி!

குறு குறு  குழைந்தையெனக்
கண்சிமிட்டி பார்த்தேன் உன்னை
விளையாட்டாய்ப் பிடுங்கிச் சென்றாய்
விழியோடு இதயம் தன்னை!

மைக்கும் நொடி மறைவாயெனில்
இமைகள் வெட்டி எறிந்திடுவேன் - உன்
இதழ்கள் தரும் சூட்டில் தானே
தினந்தோறும் உயிர்த்தெழுவேன்.


  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, April 10, 2012

கவிதையாய் சில கிறுக்கல்கள்

மரண நாள்


Photo Courtesy : ifreewallpaper.com

ன் பார்வையால்
என்றோ எரிந்து விட்ட நான்
மறுபடியும் எரிக்கப்படுகிறேன் ! - இன்று எனக்கு
மரண நாள்.


முதல் எழுத்து

Photo Courtesy : http://prozailirika.ru

 யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.

தற்கொலை 


Photo Courtesy : midiaextra.com

ன்பே!
தற்கொலைக்கு நான் எதிரி தான்
இருந்தாலும் என்ன செய்ய …
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் – என் வார்த்தைகள்
அதைத் தானே செய்கின்றன.


கல்லறை

Photo Courtesy : bp6316 @ Flickr


ல்லுக்குள் ஈரம் – என்
காதலியின் கண்ணீர் – எனது
கல்லறையில்..

 மழைக்காதல்

Photo Courtesy : http://www.wallpapermania.eu

ன்றைய இல்லங்கள் அனுமதிக்கின்றன
காதலையும் மழையையும்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மட்டும்.



 -சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, March 17, 2012

அடுப்பங்கறை

Photo Courtesy : Gangadhara108@Flikr

சுடச் சுட இட்லி பரிமாறி - வர வர
சரியாவே சாப்பிடுறதே இல்ல - என
செல்லமாய் அதட்டி ...
சட்னி, சாம்பார் , மீன் குழம்புக்கு மத்தியில்
சடாரென்று தள்ளிவிட்டு ..
சத்தமில்லாமல் அடுப்பங்கறையில் நீ
சாப்பிடுவாயே ! - 'பழையது' *
அதில் உள்ளதம்மா
பலகோடி வருடங்களுக்கான பாசமும் ;
'நீ இன்னும் சாப்பிடலையா?' எனக் கேட்க மறந்த என்னுடைய பாவமும்.

*பழையது - முதல் நாள் செய்து மிஞ்சிய சாதம்.




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 8, 2012

கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ?

Copyright : Flickr

ன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது அந்தத் தேடுதல் வேட்டை . என் நண்பனின் தம்பிக்கு ( என் தம்பி எனவும் கொள்ளலாம்.) ஒரு மேல் சட்டை வாங்குவது அதன் நோக்கம். அதன் தளபதிகள் என் தாய் தந்தையர்; நான் போர் வீரன். அனைத்து அங்காடிகளையும் அலசி ஆராய்ந்த பின்பு மிஞ்சியது ... ஏமாற்றமே ! ஏனெனில்... தளபதிகளுக்கு இந்த வீரன் இட்டக் கட்டளை, " White or Black T-Shirt L size with reasonable prize and it should impress me " . அனைத்துக் கோட்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டாலும், " IMPRESS ME " என்னும் கோட்பாடு பூர்த்தி செய்யப்படாததால் மிஞ்சியது ஏமாற்றமே !

ம் ! நண்பர்களே , தாங்கள் கடைசியாக எப்பொழுது பரிசளித்தீர்கள் ? ஞாபகம் இருக்கிறதா ?   எனக்குத் தெரியாது இந்தப் பரிசு கொடுக்கும் பழக்கத்தை எவன் ஏற்படுத்தியது என்று !  ( வேண்டுமென்றால் ஹாய் மதனிடம் கேட்கலாம் )  . அவன் எவனாக இருந்தாலும் , அவன் ஞானி. அகமகிழ்ச்சிக்கு வித்திடுபவர்கள் ஞானிகள். பரிசுகளும் அப்படியே , அகமகிழ்ச்சிக்கு வித்திடும் அருமருந்து.

ங்கு பெரும்பாலும், பரிசுகள் பணங்களால் வாங்கப்படுகின்றன. அவரவர் கையிருப்பை பொருத்தும், பின் வரும் லாபங்கள் நினைத்தும், பொருட்களின் இருப்பைப் பொருத்தும். இப்படியா பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ? எங்கு பரிசுகள் மனங்களால் வாங்கப்படுகின்றனவோ , அங்கு தான் பரிசுகளுக்குப் பரிசளிக்கப்படுகின்றது.

ரிசு என்பது வெறும் பொருள் அல்ல . அது கொடுப்பவனுடைய சுவாசம், பெருபவனுடைய உயிர். சுவாசம் எவ்வளவு தூய்மையானதோ ! விலைமதிப்பிலாததோ ! அது போல் நாம் தரும் பரிசுகள் இருக்க வேண்டும். அதைப் பெறுபவர் அந்த சுவாசத்தால் தான் பெற்ற உயிர் போல் அதை பாவிக்க வேண்டும் . இது நேர்ந்தால் அங்கு ஒரு உலகம் பிறக்கும். நட்பு உலகம்! பணமில்லாத, பேதமில்லாத, அன்பால் நிறைந்த நட்புலகம்.

ரிசுகள் இருவகைப்படும் . ஆடம்பரத்திற்காக .... உபயோகப்படுவதற்காக ... இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துத் தருவது புத்திசாலித்தனம். அதை உம்மால் தேர்வு செய்ய  இயலவில்லை என்றால், தாங்கள் அந்த நபருக்குப் பரிசளிக்கத் தேவையில்லை. ஏனெலில் ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் தரும் பரிசுகளும் வீணே ! அந்த உறவு நீடித்து நிலைக்கும் என்ற கற்பனையும் வீணே! பரிசுகள் எப்பொழுதும் குசேலனின் அவில் போல இருக்க வேண்டும். பிடித்தமானதாக; பயனுள்ளதாக.

நாம் வாங்கிய பொருட்களின் விலை தெரியக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி அதன் விலை அட்டையை அகற்றி விட சொல்கிறோம்.இது எதை மறைப்பதற்காக ?  சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய போலியான கவுரவத்திற்காக. உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர் என்றால், அந்தப் பரிசின் விலையை அவர் கண்டுகொள்ளப் போவதில்லை. " இது என்னால் முடிந்தது. இதில் பணத்தின் மதிப்பு குறைவானதாக இருக்கலாம்; ஆனால், அன்பு அளவுக்கதிகமாக இருக்கிறது  " என்று ,  எங்கு  உங்களால் பரிசளிக்க முடிகிறதோ , அங்கு தான் பரிசின் வீரமும், உங்கள் நட்பின் தீரமும் ஒளிந்திருக்கிறது.

பரிசளிக்கும் முன் சிந்திக்க வேண்டியவை :
  • முதலில் உங்கள் நண்பருக்கு எது தேவையென்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப பரிசளியுங்கள்.
  • உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மறக்காமல் அதைத் தேர்ந்தெடுங்கள். விலையின் அளவுகோல் கொண்டு ரசனையை அளக்காதீர்கள். 
  • விலைஅட்டையை நீக்காமல் பரிசளித்துப் பழகுங்கள்.
  • வழக்கமாக ... பிறந்தநாள், திருமண நாள் என பரிசளித்துப் பழகாதீர்கள். ஏனெலில் அது எதிர்பார்ப்பை வளர்த்து விடும். ஒரு சூழலில் உங்களால் பரிசளிக்க இயலவில்லை என்றால் தன் மீதுள்ள அன்பு குறைந்து விட்டதோ என உங்கள் நண்பர் நினைக்கத் தோன்றும். எனவே, ஆச்சரியமாக ! சம்பந்தமில்லாத நாட்களில் பரிசளியுங்கள். அது அந்த நாளையும் உங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
  • பரிசுகளோடு, அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் சிறுகுறிப்பில் எழுதி பரிசளியுங்கள். அது அன்பை மேலும் வலுப்படுத்தும்.
  • பொதுவாக கைக்குட்டை, பேனா போன்றவை பரிசளிக்கக்கூடாது என்னும் நம்பிக்கைகள் இருக்கின்றன. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் .. தவறில்லை. அன்பானவர்களுக்கு மத்தியில் உலவும் சிறுமுட்டாள்த்தனம் அழகானவை.
  • கொடுத்த பரிசுகளை எந்தவொரு சூழலிலும் சொல்லிக்காண்பிக்காதீர்கள். அது, உங்கள் தரத்தை தாங்களே தாழ்த்திக் கொள்வது போல் அமையும்.
  • பரிசுகள் பற்றிய எதிர்பார்புகளை உருவாக்காதீர்கள். நீங்களும் எதிர்பார்க்காதீர்கள். ஆச்சரிய பரிசுகள் மட்டுமே அழகானவை! உயிரானவை !

பரிசுகள் அழகானவை. பரிசளிப்பவர்கள் அழகானவர்கள். பரிசு பெறுபவர்கள் பாக்கியவான்கள். வாருங்கள், இன்று முதல் பரிசளித்துப் பழகுவோம்.
  
சரி ! உங்களில் யார் எனக்கு முதல் பரிசு அளிக்கப்போகிறீர்கள். 


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, March 1, 2012

தயவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !




முன் குறிப்பு : தன்னுடைய புகைப்படத்தை முகப்புத்தகம் மூலம் பகிர்ந்து கொண்ட நண்பர் சுதாகருக்கு எனது நன்றிகள் ! 

யவு செய்து புகைப்படம் எடுத்து செல்லுங்கள் !
யாருக்குத் தெரியும் - அடுத்தமுறை
உங்கள் மகனோ! மகளோ! வரும்பொழுது
காணாமல் போயிருக்கக்கூடும்
காயம் பட்ட கற்சிற்பங்கள் ;
காற்றின் காரணமாக - கொஞ்சம்
கவனக்குறைவின் காரணமாக !

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, February 10, 2012

♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥

Photo Courtesy : MUK Team
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல 
காமம் தீர்க்குமா
காதல் ? 



Photo Courtesy : http://nickstraffictricks.com


ன் 
செல்ல அதட்டல்களுக்கு
அடங்கிப் போகிறேன் 
அழகிய நாய்க்குட்டி போல ...


Photo Courtesy : motto.net.ua

  
நாட்காட்டியின் அத்தனை நாட்களும்
காதலர் தினமாய் ...
என்றோ ஓர் நாள் - அதை
நீ புரட்டிய காரணத்தினால் !


Copyright : http://hawaiiw.net


 ன்
சிறுசிறு சிணுங்கல்களில்
சிதறிப்போகும் என்னை !
சேர்த்து வைப்பது - உன்
முத்தங்களும்....
மௌனங்களும் ....


Copyright : http://slodive.com


டைசி நிமிட உறக்கம்
நம் காதல்
தொடரவும் முடியாமல் ....
பிரியவும் முடியாமல் ....



 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Tuesday, January 24, 2012

நிதர்சனம்

Copyright : Google


முகங்கள் முகங்கள் மறந்தேன் ;
முகப்புத்தகத்தில் தினமும் திரிந்தேன்.
யுகங்கள் யுகங்கள் அளந்தேன்;
பிஞ்சு இதழ்மொழி அறியேன்.

லகம் பெரிதாய் தெரிந்தது - என்
மகிழ்ச்சி அதுபோல் இருந்தது.
உலகம் சுருங்கிப் போனது - என்
மனமும் மழுங்கிப் போனது.

ண்மை சொன்னால் கசக்குது;
பொய்கள் எங்கும் சிரிக்குது.
காதல் கடையில் கிடைக்குது;
காசில் நட்பு பிறக்குது.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Saturday, January 7, 2012

ஏன் இந்தக் கொலைவெறி ?

Photo Courtesy : healthcareconsiderations.blogspot.com

குறிப்பு : சென்ற வருடம் என்னுடைய பழைய வலைப்பூவில் எழுதிய பதிவு, அதனை மறு பதிப்பு செய்கிறேன்.

அனைவருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

சொந்த அலுவல் காரணமாக தொடந்து எழுத இயலாமைக்கு எனது வருத்தங்கள். வருடத்தின் முதல் பதிவு இவ்வாறு அமைய வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், காலத்தின் கட்டாயம் அதுவெனில் யாது செய்ய இயலும் .

ற்று நிதானமாகவும் நியாமாகவும் பார்க்க வேண்டிய விஷயம் தான் அண்மையில் அரங்கேறியிருப்பது. இரத்தக்கறைகள் படியாத செய்தித்தாள்கள் வருங்காலத்தில் வெளியாகாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு அச்சிடப்படாத ஆதாரம். மருத்துவர் ஒருவர், மதிகெட்ட மூடன் ஒருவனால் மரணத்திற்கு தள்ளப்பட்ட சம்பவத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பீர்கள் ! அலசியிருப்பீர்கள் !

நான் பேசவிருப்பது ...
அதைப் பற்றியல்ல ; அதைச் சார்ந்திருப்பது பற்றி . ஆம், இத்தகைய சூழல் உருவாவதற்கு காரணம் சில அடிப்படைத் தவறுகளே ! தவறுகள் மக்களிடம் மட்டுமல்ல, அங்கங்கே  மருத்துவ சமூகத்திலும் புதைந்திருப்பது உண்மை தான் ! ( என்னுடைய மருத்துவ நண்பர்கள், என்னுடைய இக்கருத்துக்குக் குறைபட்டுக்கொண்டாலும், இதில் பொதிந்திருப்பது உண்மை என்பது அவர்கள் அறிந்ததே ! )

ருத்துவர்களின் தவறுகளில் சில ...

  • பல்கலைக்கழக பாடப்புத்தகங்கள் அறிவுமிக்க மருத்துவர்களை உருவாக்குகிறதே தவிர மனிதம் நிறைந்த மருத்துவனை உருவாக்க மறந்து விடுகிறது. வலிக்கான மருந்தை மட்டுமே பரிந்துரை செய்யும் எங்கள் படிப்பு, வலியின் வேதனையை ஒரு போதும் உணரச்செய்ததில்லை. ( இந்த 5 ஆண்டு கால படிப்பில், இதுவரை எந்தவொரு புத்தகமுமோ, பேராசிரியரோ நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்ததாக நினைவில்லை.)
  • தெரிந்தவரின் நோயாளி என்றால் முன்னுரிமை கொடுப்பதும், மிகவும் கவனத்துடன் கையாள்வதும், அதுவே அறியாத ஒருவர் என்றால் அலட்சியம் காட்டுவதும் நடைமுறையில் நடைபயின்று கொண்டு தான் இருக்கிறது. ( பிரிவினைக் கலாச்சாரம் ( Partiality ) மற்ற துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக , உயிரைக் காக்கும் இத்துறைக்கு அது அவசியம் தானா? )
  • பணத்தின் பின் மருத்துவம் பயணிக்க ஆரம்பித்து பலவருடம் ஆகிவிட்டது! இந்த மாற்றத்திற்கு காரணம் மருத்துவர்கள் மட்டுமல்ல, மக்களும் தான் ! தனியார் மயமாக்கல், வணிகமயமாக்கல், அரசியல் உள்ளீடுகள் அனைத்தும் இவற்றின் அடிப்படை நாதங்கள்!
  • தன்னைத்தானே பெருமையாக நினைத்துக்கொள்ளும் மெத்தனப்போக்கு ! மருத்துவன் என்ற நிலையில் இருந்து வழுவி, தன்னை ஒரு கடவுளாக பாவித்துக்கொள்ளும் பரிதாபச் செயல் ( விதிவிலக்குகள் வெகுசிலர் மட்டுமே ! )
  • ஒற்றுமையின்மை ! என் வீட்டு கூரை எரிகிற வரைக்கும் எனக்கு என்ன கவலை என்னும் சுயநல எண்ணம் ! ( மருத்துவர்கள் அவசியம் களைய வேண்டிய ஒரு குணம் ! இது அறிவுரையல்ல - காலத்தின் கட்டாயம் )

க்களின் அறியாமைகளில் சில ....

  • பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் மெத்தப்படித்தவர் ; அதிகம் அறிந்தவர் ; நம்மை விரைவில் நோயிலிருந்து விடுவிப்பார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கை .  ( அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான். இலவசமாக வைத்தியம் பார்க்க நாங்கள் தயார் ! அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்குறாரே ! நல்லா பார்ப்பாரா ? )
  • ஒத்துழைப்புத் தாருங்கள் ! மருத்துவர்களும் மனிதர்களே ! அவர்களுக்கும் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளும் வைக்கப்பெற்றிருக்கும் . ( புரியவில்லை என்றால் ஒருமுறை உங்கள் அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு சென்று வாருங்கள். நோயாளிகளை மருத்துவர்கள் நிந்திப்பதை மட்டும் கவனிக்காமல் அதன் அர்த்தத்தையும் அலசிப்பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு கட்டாயம் புரியும். )
  • அரசு மருத்தவமனைகளில் ஒழுங்கான மருத்தவம் செய்யப்படுவதில்லை என வருத்தம் தெரிவிக்கும் அறிவாளிகளே ! என்றேனும் ஒரு நாள் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் சரிவர வழங்கப்படுகின்றனவா ? நோயாளி, மருத்துவர், செவிலியர் விகிதாசாரம் சரியான அளவில் இருக்கிறதா என  யோசித்துள்ளீர்களா ? 
  • ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் ! ஒரு உயிர்க்கொல்லி (HIV) நோயாளியின் அருகில் அமர்ந்து நீங்கள் பயணம் செய்வீர்களா? ஆனால், அதே நோயாளிகளின் இரத்தத்தை நாங்கள் கையாள்வதும், அவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிப்பதும் நடைப்பெற்றுக் கொண்டுதானே இருக்கிறது ! அச்சமயம் ஏதோ ஒரு உதிரத்துளி எங்கள் கண்களிலோ, காயம்பட்ட எங்கள் கைகளிலோ தவறி விழுந்தால், தவறு செய்யாமலேயே நாங்கள் தண்டிக்கப்படுவோமே ! அதனை என்றேனும் யோசித்துள்ளீர்களா ? உங்கள் நோயைப் போக்குவதற்காக நாங்கள் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
  • கடவுளாக எங்களைத் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது எங்கள் கடமை. கடமை செய்பவர்களை முடிந்தால் பாராட்ட வேண்டுமே தவிர தொழக் கூடாது.

றுதியாக, அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Related Posts Plugin for WordPress, Blogger...